3 பெண்களிடம் ரூ.10¼ லட்சம் மோசடி
வேலை வாங்கித்தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.10¼ லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
வேலை வாங்கித்தருவதாக கூறி 3 பெண்களிடம் ரூ.10¼ லட்சம் மோசடி செய்த போலி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
3 பெண்களிடம் மோசடி
கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகரை சேர்ந்தவர் முகுந்தன். இவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நான் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு காந்திபுரம் அருகே உள்ள அலமு நகரை சேர்ந்த விஜயகுமார் (வயது 32) என்பவர் எனக்கு அறிமுகமானார். அவர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருவதாக கூறினார். மேலும் யாருக்காவது அரசு வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறினார். இதனை நம்பி நான் எனக்கு தெரிந்த நாகரத்தினம், கலையரசி, ஜனனி ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி கொடுக்கும்படி கேட்டேன்.
போலி அதிகாரி கைது
இதற்காக அவர் என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை பெற்றார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவர் வேலை வாங்கி தரவில்லை. இதனையடுத்து நாங்கள் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டோம். அவர் பாதி பணத்தை கொடுத்துவிட்டு ரூ.10 லட்சத்து 27 ஆயிரம் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுதர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த விஜயகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைதான விஜயகுமார் சென்னையில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்றும், தொடர்ந்து அதிகாரி என்று கூறி ஏராளமானவர்களிடம் மோசடி செய்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.