ஓமலூர் அருகே திருமணம் ஆன 10 நாட்களில் புதுப்பெண் வாலிபருடன் ஓட்டம் வீட்டை சூறையாடிய தந்தை உள்பட 3 பேர் கைது

ஓமலூர் அருகே திருமணம் ஆன 10 நாட்களில் புதுப்பெண் வாலிபருடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அந்த வாலிபரின் வீட்டை பெண் வீட்டார் சூறையாடினர். இது தொடர்பாக புதுப்பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-21 20:34 GMT

ஓமலூர், 

புதுப்பெண் ஓட்டம்

ஓமலூரை அடுத்த மூங்கிலேரிப்பட்டி பாண்டியன் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மகள் பூர்ணிமா (வயது 20). இவரும், அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23) என்ற வாலிபரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பூர்ணமாவின் பெற்றோர் அவரை சமரசம் செய்து உறவினர் ஒருவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் பூர்ணிமா தனது காதலருடன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஓடிவிட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம் மற்றும் உறவினர்கள் அஜித்குமாரின் வீடு, சரக்கு வேன் மற்றும் வைக்கோல் கட்டு ஆகியவற்றிற்கு தீ வைத்துள்ளனர். மேலும் அஜித்குமாரின் வீட்டை அடித்து நொறுக்கி உள்ளனர்.

தந்தை உள்பட 3 பேர் கைது

இதுபற்றி காடையாம்பட்டி தீயணைப்பு படையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் நிலைய அலுவலர் ராஜசேகர் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராடி தீயை அணைத்தனர். இது குறித்து அஜித்குமாரின் தாயார் தங்கமணி, தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இது தொடர்பாக மரக்கோட்டை மூங்கிலேரிபட்டி பாண்டியன் காட்டுவளவு பகுதியை சேர்ந்த பூர்ணிமாவின் தந்தை மாணிக்கம் (45), அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற சுப்பிரமணி (25), கணபதி (32) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்