வாலிபரை தாக்கியவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தாக்குதல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி காளியம்மன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் அருண்மொழி (வயது 23).
கும்பகோணம் செக்கடி தெரு பகுதியை சேர்ந்தவர் விஸ்வலிங்கம். இவரது மகன் மணிகண்டன். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி மதியம் அருண்மொழி தனது நண்பரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது மேலக்காவேரி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன், அருண்மொழியின் மோட்டார் சைக்கிளில் மோதி அவரை கீழே தள்ளினார். மேலும் அவரை மணிகண்டன் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அருண்மொழி தனது தந்தை மணிமாறனுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமாறன், அருண்மொழியை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
1 ஆண்டு சிறை
இதுகுறித்து அருண்மொழி கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதித்துறை நடுவர் எண் -1-ல் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், மோட்டார் சைக்கிளால் மோதி அருண்மொழியை கீழே தள்ளி தாக்கிய மணிகண்டனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறினார்.