இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற 1½ டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-07-15 18:45 GMT

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க கடலோர பாதுகாப்புக்குழும போலீசார், கியூ பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கஞ்சா மற்றும் பீடி இலைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தூத்துக்குடி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையிலான போலீசார் புதிய துறைமுகம் கடற்கரை சாலை பகுதியில் நேற்று காலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது இனிகோ நகர் கடற்கரை அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த மினிவேனில் சோதனை நடத்தியதில், பீடி இலை மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

அவற்றை இலங்கைக்கு கடத்துவதற்காக அங்கு கொண்டு வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் போலீசார் வருவதை அறிந்ததும் மர்ம நபர்கள் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சுமார் 1½ டன் எடையுள்ள 40 மூட்டை பீடி இலைகளையும், மினிவேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த முயன்ற பீடிஇலை மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்