நாகை மாவட்டத்தில் காளான் வளர்க்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காளான் வளர்ப்பு
நாகை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் கிராமங்களில் காளான் வளர்ப்பு மூலம் சுயதொழிலை பெருக்கவும், விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் காளான் வளர்ப்பு குடில் அமைக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் காளான் வளர்க்க நினைப்பவர்கள், பயிற்சி பெற்றவர்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞர்அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் அமைத்துக்கொள்ளலாம்.
600 சதுர அடியில் காளான் வளர்ப்பு குடில் அமைக்கவும், தேவையான பொருட்களை வாங்கவும் ரூ.2 லட்சம் செலவாகும்.
ரூ.1 லட்சம் மானியம்
இதில் 50 சதவீத பின்னேற்பு மானியமாக அதிகபட்சம் ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். விவசாயிகள் மட்டுமின்றி மிகக்குறைந்த நிலமுடையவர்கள், நிலமில்லாதவர்கள், பெண் தொழில் முனைவோர், ஆதிதிராவிட பழங்குடி வகுப்பினர் ஆகியோர் 50 சதவீத மானியத்துடன் தங்கள் விவசாய நிலம் அல்லது வீட்டின் பின்புறத்தில் காளான் பண்ணை அமைத்து பயன்பெறலாம்.
கூடுதல் தகவல் பெற கீழ்வேளூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் 9578513786, துணை தோட்டக்கலை அலுவலர் 9629985463, வேதாரண்யம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் 84893 64388, தோட்டக்கலை அலுவலர் 89734 82120 மற்றும் தலைஞாயிறு வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் 97505 81233 ஆகியோரின் செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.