திருச்சியில் ரூ.1¼ லட்சம் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சோதனை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இதனைத்தொடர்ந்து மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் விதமாக வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தும், அவ்வப்போது சோதனைகளும் நடத்தப்பட்டு வந்தது.
ரூ.50 ஆயிரம் அபராதம்
இந்தநிலையில் மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் உத்தரவின்பேரில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கவும், கடைகளில் சோதனை நடத்தவும் மாநகராட்சி உதவி ஆணையர்கள் அக்பர்அலி, சண்முகம், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, சுகாதார அலுவலர் டேவிட் முத்துராஜா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் நேற்று திருச்சி பெரியகடைவீதி பகுதியில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.