வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி: ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை- நெல்லை அருகே சோகம்

நெல்லை அருகே வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி செய்தவரிடம் ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2022-07-05 21:24 GMT

நெல்லை அருகே வாட்ஸ்-அப்பில் பெண்கள் படங்களை அனுப்பி மோசடி செய்தவரிடம் ரூ.1 லட்சம் இழந்த ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.டி. ஊழியர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நிவாசாராவ் மகன் ஜெயசூர்யா (வயது 22). பி.டெக் பட்டதாரியான இவர் நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இதற்காக ஜெயசூர்யா தனது நண்பர்களுடன் தாழையூத்து அருகே பண்டாரக்குளம் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

தூக்கில் பிணம்

நேற்று முன்தினம் காலையில் ஜெயசூர்யா தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று விட்டுவிட்டு வந்தார்.

ஆனால், ஜெயசூர்யா வேலைக்கு செல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்தார். மாலையில் அவரது நண்பர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டிக்கிடந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நண்பர் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, ஜெயசூர்யா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக தாழையூத்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

பெண்கள் படம்

போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயசூர்யாவின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு மர்மநபர் ஒருவர் சில பெண்களின் படங்களை அனுப்பினார். அந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரூ.1 லட்சம்

இதனை நம்பிய ஜெயசூர்யா, அந்த மர்மநபருக்கு செல்போன் மூலம் ரூ.1 லட்சம் வரை அனுப்பி உள்ளார். பின்னர் அந்த நபர், ஜெயசூர்யாவை நெல்லை உடையார்பட்டி பகுதிக்கு வர சொன்னார். இதையடுத்து ஜெயசூர்யா அந்த இடத்திற்கு சென்றார். ஆனால் அங்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் விரக்தியில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பரபரப்பு

இதுகுறித்து போலீசார், அந்த மர்மநபரின் வாட்ஸ்-அப் எண்ணை ஆய்வு செய்தபோது அந்த எண் வடமாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்