1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை

கடலூர் மாவட்டத்தில் 15 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-08-02 18:58 GMT

விலை உயர்வு

கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததாலும் தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 1 கிலோ தக்காளி ரூ.140, ரூ.150 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடையில் விலை குறைந்து மீண்டும் அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் இல்லத்தரசிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

15 ரேஷன் கடைகளில்...

இதற்கிடையில் தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு கூட்டுறவுத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கங்கள் மூலம் ரேஷன் கடைகளில் தக்காளி 1 கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்ய உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் 1416 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் 15 ரேஷன் கடைகளில் மட்டும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கடலூரில் 5 ரேஷன் கடைகளில் 1 கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். 100 முதல் 150 கிலோ மட்டும் விற்பனை செய்யப்பட்டது. அதுவும் விற்க ஆரம்பித்த 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்தது.

ரூ.60-க்கு விற்பனை

இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதி ரேஷன் கடைகளிலும் தக்காளி ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச்சென்றனர். ஒரு நபருக்கு 1 கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. இந்த தக்காளி விற்பனையை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்