மதுரை: நகைக்கடையில் பயங்கர தீ விபத்து - ஒருவர் பலி
தெற்குமாசி வீதியில் நகைக்கடை அமைந்துள்ளது.
மதுரை,
மதுரை தெற்குமாசி வீதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (வயது 45). இவரும் நேற்று கடையில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் நகைக்கடையின் முதல் தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை கண்ட மோதிலால் தீயை அணைக்க முதல் தளத்திற்கு விரைந்து சென்றார். தீ வேகமாக பரவியதால் மோதிலாலால் கீழ்தளத்திற்கு செல்லமுடியவில்லை. அதேவேளை, தீ வேகமாக பரவிய நிலையில் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்து வெளியேறினர்.
ஆனால், மோதிலால் நகைக்கடையின் முதல் தளத்தில் சிக்கிக்கொண்ட நிலையில் தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
தீ கட்டுக்குள் வந்த நிலையில் நகைக்கடைக்குள் சிக்கிக்கொண்ட மோதிலாலை மீட்க தீயணைப்பு வீரர்கள் கடைக்குள் சென்றனர். கடைக்குள் இருந்த ஒரு அறையில் மோதிலால் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்ட மீட்புக்குழுவினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மோதிலாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.