மாநகர பஸ் மோதி வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்த விபத்தில் புதுக்கோட்டை வாலிபர் பலி
சென்னை கத்திப்பாராவில் மாநகர பஸ் மோதி வழிகாட்டி பெயர் பலகை தூண் சரிந்து விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த புதுக்கோட்டை வாலிபர் பலியானார்;
வழிகாட்டி பெயர் பலகை தூண்
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி நேற்று மதியம் 3 மணியளவில் மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, அதிவேகமாக வந்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை வளைவு பகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சாலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது.
வாலிபர் படுகாயம்
இதில் வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முக சுந்தரம்(வயது 28) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பெயர் பலகை விழுந்ததில் சாலையில் கவிழ்ந்த மினிவேன் டிரைவர் ஜான்பீட்டர்(43) மற்றும் ராட்சத இரும்பு தூண் மீது மோதியதில் மாநகர பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியதுடன், முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்ததால் பஸ்சில் பயணம் செய்த 4 பயணிகள் என 5 பேர் காயம் அடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வாலிபரை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஜான்பீட்டரும் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயம் அடைந்த மற்ற 4 பேரும் முதலுதவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
போக்குவரத்து பாதிப்பு
பெயர் பலகை தூண் விழுந்து கிடந்ததால் அந்த பகுதியில் சாலையின் இருபக்கமும் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் கிண்டியில் இருந்து கத்திப்பாரா வரையிலும், கத்திப்பாராவில் இருந்து பழைய மீனம்பாக்கம் வரையிலும் சாலையின் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போலீசார் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து சாலையில் விழுந்து கிடந்த பெயர் பலகை ராட்சத தூணை அகற்றினார்கள். மாநகர போக்குவரத்து கழக மீட்பு வாகனம் மூலம் விபத்தை ஏற்படுத்திய மாநகர பஸ்சை அப்புறப்படுத்தினர். சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. விபத்து ஏற்படுத்தியதும் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பஸ் டிரைவரான ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த ரகுநாத் (வயது 44), கண்டக்டர் சின்னையன் (47) இருவரும் நைசாக தப்பி ஓடிவிட்டனர். பின்னர் இருவரும் பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் சரண் அடைந்தனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பஸ்சை தூக்க கலக்கத்தில் அதிவேகமாக ஓட்டி வந்தாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.