கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 1 கோடி பெண்கள் தேர்வு: முதல்-அமைச்சர் அறிவிப்பு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற 1 கோடியே 6 லட்சம் பெண்கள் தகுதியுள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.;
சென்னை,
தமிழகத்தில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட இருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.
மு.க.ஸ்டாலின் ஆய்வு
இத்திட்டத்தை அண்ணாவின் பிறந்த நாளான வரும் 15-ந் தேதியன்று தொடங்குவது குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் ஆற்றிய உரை வருமாறு:-
15-ந் தேதி
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழா, வரும் 15-ந் தேதி காஞ்சீபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையிலும் விழா நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் இதுதான்.
ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்பெறுகிறார்கள் என்பதால் கிடைக்கிற பாராட்டு, ஒரு கோடி பாராட்டுகளுக்கு சமம். சிறு தவறு நடந்துவிட்டால் அதனால் கிடைக்கும் கெட்ட பெயரும் அதுபோலத்தான். எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் எந்த ஒரு தனிநபருக்கும் சிறு தவறுகூட நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தகுதி பெற்றோர்
தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரும் 15-ந் தேதி முதல் கிடைக்கும். மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஏ.டி.எம். அட்டைகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும், படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். ஏ.டி.எம். அட்டை வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது.
வரும் 15-ந் தேதி, என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும் குறுஞ்செய்தியில், பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய இலவச போன் எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1.63 கோடி விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர்.
அப்படியானால் மற்றவர்களது கோரிக்கைகள் ஏன் ஏற்கப்படவில்லை? என்பதை நாம் சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கையை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். அப்படி அனுப்பினால்தான் மனநிறைவு அடைவார்கள்.
அரசு மீது நம்பிக்கை
மறுபடியும் நம்மிடம் விண்ணப்பிப்பார்கள். அப்படி வாய்ப்பை வழங்கினால் பொதுமக்களுக்கு அரசின் மீது மிகுந்த நம்பிக்கை ஏற்படும். 15-ந் தேதியன்று மாவட்டத் தலைநகரங்களில் நடக்கும் விழாவிற்கு பணம் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக வருவார்கள். பணம் கிடைக்காத மகளிர் அங்கு வந்து கேட்டால், பதில் சொல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
தனியாக இதற்கென அலுவலர்களை உட்கார வைத்து, இப்படி கேட்க வரும் மகளிரிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி, நாங்கள் பரிசீலிக்கிறோம் என்பதைச் சொல்லி அனுப்பி வைப்பது மிகமிக முக்கியமாகும். ஒரு இடத்தில் பிரச்சினை என்றாலும், அது மாநிலம் முழுவதும் பெரிய செய்தியாக மாறிவிடும். மாவட்ட கலெக்டர் அனைவரும் இந்த திட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாதத்தில் முதல் ஒரு வார காலம் இந்த திட்டத்துக்காக தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் மாபெரும் திட்டம் இது. பாராட்டுகளை மட்டுமே பெற்றுத்தரும் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வளர்ச்சி ஆணையர் முருகானந்தம், நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.