கழிவுநீர் கலக்காமல் மழைநீரை சேமிக்க ரூ.1 கோடியில் திட்டம்

கழிவுநீர் கலக்காமல் மழைநீரை சேமிக்க ரூ.1 கோடியில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Update: 2022-10-08 19:00 GMT


திண்டுக்கல் நகரில் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. அதில் பெரும்பாலான குளங்கள் கழிவுநீர், குப்பைகளால் நிரம்பி விட்டன. அவை திண்டுக்கல் நகருக்கு சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் அபாயத்தில் இருக்கின்றன. அவற்றில் கோபாலசமுத்திரம் குளம், ஒய்.எம்.ஆர்.பட்டி குளம், நத்தம் சாலை குளம் ஆகியவை தூர்வாரப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யவும் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. எனினும் கனமழையின் போது மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து குளத்துக்கு வருவதை தடுக்க முடியவில்லை. எனவே நகரில் உள்ள குளங்களில் கழிவுநீர் கலக்காமல் மழைநீரை மட்டுமே சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் முதல்கட்டமாக கோபாலசமுத்திரம் குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, மழைநீரை மட்டும் சேமிக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.


இந்த கோபாலசமுத்திரம் குளத்தின் அருகே திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. எனவே அரசு மருத்துவமனையின் கட்டிடங்கள், வளாகத்தில் விழும் மழைநீரை சேகரித்து குழாய் மூலம் கோபாலசமுத்திரம் குளத்துக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் கோபாலசமுத்திரம் குளத்தில் கழிவுநீர் கலக்காமல் மழைநீர் சேமிக்க முடியும். இதற்காக ரூ.1 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்