ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி

கடலூரில், ஏலச்சீட்டு நடத்தி ரூ.1½ கோடி மோசடி செய்ததாக 9 பேர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2023-03-29 19:26 GMT


கடலூர் புதுப்பாளையம் சிக்கந்தர்தெருவை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ஜெயமாலினி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மகள், மருமகன் ஆகியோர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர். அதில் சேர்ந்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறினர். மேலும் எங்களிடம் சீட்டு கட்டினால், சீட்டு எடுத்த அன்றே பணம் கொடுத்து விடுவோம்.

அதேபோல் தீபாவளி சீட்டு கட்டினால், தீபாவளிக்கு 20 நாட்களுக்கு முன்பே உங்களுக்கு சேர வேண்டிய பொருட்கள், தங்க நாணயத்தை தந்து விடுவோம் என்று அவர்களுடன் இருந்த 6 பேரும் சேர்ந்து தெரிவித்தனர்.

ரூ.1½ கோடி

இதை நம்பி ஜெயமாலினி 1லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கட்டி உள்ளார். மணிமேகலை ரூ.10 லட்சம், மோகனா ரூ.5 லட்சத்து 30 ஆயிரம் என 30-க்கும் மேற்பட்டவர்கள் ரூ.1 கோடியே 40 லட்சம் வரை கட்டி உள்ளோம். சீட்டு விழுந்தவுடன் பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அடுத்த மாதம் தருகிறேன் என்று காலதாமதம் செய்து வந்தனர். தற்போது அவர் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இது பற்றி விசாரித்த போது, அவர்கள் சென்னை திருவெற்றியூரில் வசித்து வருவது தெரிய வந்தது. மேலும் எங்களிடம் மோசடி செய்த பணத்தில் திருவள்ளூர் பகுதிகளில் வீடு, நிலம் வாங்கி உள்ளனர். இது தெரிந்து பணத்தை கேட்ட எங்களை அடியாட்கள் மூலம் மிரட்டுகின்றனர். ஆகவே எங்களிடம் மோசடி செய்த பெண் உள்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுத்து, எங்கள் பணத்தை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்