அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¾ கோடி மோசடி செய்த போலி அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2022-10-05 22:52 GMT

பெரம்பலூர்,

திருச்சி மாவட்டம் சிங்காளந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது40). இவர் தற்போது பெரம்பலூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இவரை பெரம்பலூர் ரோஸ்நகரை சேர்ந்த மோகன்பாபு (25) என்பவர் கடத்தி வீட்டில் சிறைபிடித்து வைத்திருப்பதாக பிரகாசின் உறவினர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து மோகன்பாபு வீட்டிற்கு பெரம்பலூர் போலீசார் கடந்த 3-ந்தேதி சென்று பிரகாசை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில், பிரகாஷ் பெரம்பலூரில் மருந்துகடை நடத்தி வரும் தனக்கு அறிமுகமான மோன்பாபு, அவரது மனைவி சாருமதி மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் என 26 பேரிடம் அரசு வேலை வாங்கி தருகிறேன் என கூறி மொத்தம் ரூ.1 கோடியே 83 லட்சத்தை வாங்கி மோசடி செய்ததும், அந்த பணத்தை வாங்குவதற்காக சென்னையில் இருந்த பிரகாசை கடந்த 29-ந்தேதி காரில் பெரம்பலூருக்கு அழைத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.பின்னர் மோகன்பாபுவின் மனைவி சாருமதி கொடுத்த புகாரின் பேரில் பிரகாசை போலீசார் மோசடி வழக்கில் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பிரகாசை கடத்தியதாக மோகன்பாபுவும் கைதானார்.

அரசு அதிகாரி என்றும் மோசடி

பிரகாஷ் ஏற்கனவே உள்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையில் இணை செயலாளராக பணிபுரிந்து வருவதாகவும், தனக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 2 பேர் நண்பர்கள் என்றும், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் உதவியாளர் என்றும் பல பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால் அவர் டிப்ளமோ பிரிண்டிங் டெக்னாலஜி என்கிற படிப்பு படித்துள்ளார்.

மேலும் அவருடன் தொடர்புடைய 2 பேரை ஏற்கனவே சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். பிரகாஷ் மீது சிவகங்கை, திருச்சி மாவட்டம், துறையூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்