தினசரி முட்டை உற்பத்தி 1 கோடி சரிவு
நாமக்கல் மண்டலத்தில் தினசரி முட்டை உற்பத்தி 1 கோடி சரிவடைந்து உள்ள நிலையில், ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.;
510 காசுகளாக உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்ஒன்றுக்கு சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக சத்துணவு திட்டத்துக்கும், கேரளா மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும், உள்ளூர் தேவைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
முட்டையின் கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தினசரி நிர்ணயம் செய்கிறது. கடந்த மே மாதம் முதல் மைனஸ் இல்லாத முட்டை விலையை அறிவித்து வருகிறது. இதை அனைத்து பண்ணையாளர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் 1-ந் தேதி 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட கொள்முதல் விலை, 2 நாட்களில், 400 காசுகளாக சரிவடைந்தது. தொடர்ந்து ஏற்றம் காணப்பட்டு, 20-ந் தேதி 490 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை, 2 வாரம் நீடித்த நிலையில், கடந்த 4 நாட்களில், 20 காசுகள் உயர்ந்து 510 காசுகளாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் முட்டை ஏற்றுமதி அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
முட்டை உற்பத்தி சரிவு
இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-
கோழிகளுக்கான தீவனங்களின் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்து உள்ளது. அதனால் உற்பத்தி செலவை ஈடுசெய்வதற்காக, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலையை பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக, தினசரி 50 லட்சம் முட்டை உற்பத்தி சரிந்தது. அதேபோல், கோழி குஞ்சு விடுவதை 12 வாரத்தில் இருந்து 15 வாரம் கழித்து விட்டதால் 50 லட்சம் முட்டை உற்பத்தி குறைந்தது. அதன்படி தற்போது, தினசரி 1 கோடி முட்டை உற்பத்தி சரிந்து உள்ளது.
அதேசமயம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 3 முதல் 4 கோடியாக இருந்த முட்டை ஏற்றுமதி, தற்போது 5 முதல் 6 கோடியாக அதிகரித்து உள்ளது. இது மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.