அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1½ கோடியில் தங்கும் கட்டிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள் தங்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2023-09-11 21:20 GMT

சென்னை,

2023-2024-ம் ஆண்டு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்க வைப்பதற்கும், ரூ.1.5 கோடி செலவில், புதிய தங்குமிடம் அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மிக விரைவில் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, கழிப்பிட மற்றும் குளியலறை ஆகிய வசதிகளுடன் தங்குமிட கட்டிடம் கட்டப்படவுள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை

மதுரவாயல் பகுதியை சேர்ந்த 4 வயது சிறுவன் ரக்சன் டெங்கு பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது வருத்தத்திற்குரியதாக உள்ளது. முதல்-அமைச்சரின், வழிகாட்டுதலின்படி, கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் இருந்தாலும், தற்போது வரை 253 பேர் டெங்கு பாதிப்பிற்காக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளையும் மிகத் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு, கொசு ஒழிப்பு பணிகளை மிகத்தீவிரமாக மேற்கொண்டு டெங்கு பாதிப்பினால் ஏற்படும் இறப்பு விகிதத்தை தீவிரமாக குறைத்து வருகிறார்கள். இந்தாண்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 12 ஆயிரத்து 121 ஆகும். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3 பேர் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

குடிநீரில் குளோரின் அளவு

போதிய மருந்துகள் கையிருப்பு இருப்பதுடன், எந்திரங்கள், பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. 1,500 கிலோ நிலவேம்பு பவுடரும், 250 கிலோ கபசுர குடிநீர் பவுடரும் கையிருப்பில் உள்ளது. குடிநீரில் உள்ள குளோரின் அளவு தினந்தோறும் பரிசோதனை செய்யப்படுகிறது.

மருத்துவத்துறை அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. பாத்திரங்களில் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடாது என்று பொதுமக்களுக்கும் விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது. கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருட்களை வழங்கும் நிறுவனம் கருப்பு பட்டியலில் இருந்தால் அவர்களால் ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் தி.சி.செல்வவிநாயகம், அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி இயக்குநர் டாக்டர் கல்பனா, துணைத்தலைவர் டாக்டர் ஹேமந்த் ராஜ், பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்