பரமக்குடியில் கால்வாய் உடைந்து 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

பரமக்குடியில் கால்வாய் உடைந்து 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2022-11-15 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் கால்வாய் உடைந்து 300 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்

வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையை வந்தடைந்தது. அங்கிருந்து வைகை ஆற்றுக்கும், வலது பிரதான கால்வாய்க்கும், இடது பிரதான கால்வாய்க்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் வலது பிரதான கால்வாய் நிரம்பி கரை உைடந்து பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட பர்மா காலனி, திருவள்ளுவர் நகர், பங்களா ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள 300 வீடுகளை வெள்ளம் நேற்று முன்தினம் இரவு திடீரென சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் விடிய, விடிய தூங்காமல் அவதிப்பட்டனர்.

சீரமைக்கும் பணி

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வருவாய்த்துறை அதிகாரிகளும் பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணா, நகர் மன்ற உறுப்பினர் கிருஷ்ணவேணிமுத்து பழனிகுமார் உள்ளிட்டோர் உடனே அங்கு சென்று பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய் கரையை சீரமைக்கும் பணியில் அதிகாரிகளுடன் ஈடுபட்டனர்.

அதேபோல் பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சோமநாதபுரம், நிலா நகர், கனிநகர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், வேலைக்கு செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, ஒவ்வொரு முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது நாங்கள் அவதிப்படுகிறோம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு நிரந்தர தீர்வு மேற்கொள்ள வேண்டும். கால்வாயை தூர்வாரி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்