கரூர்: கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

கட்டுமான பணியின் போது கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2022-11-15 12:11 GMT

கரூர்,

கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில், குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் 'மேன்ஹோல்' எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்துள்ளார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்