கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

கோத்தகிரியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார். மேலும் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-11-15 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரியில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசு பஸ் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார். மேலும் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர்.

அரசு பஸ்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து குன்னூருக்கு நேற்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை நெடுகுளா கிராமத்தை சேர்ந்த டிரைவர் ரகுநாதன் (வயது 45) ஓட்டினார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கோத்தகிரி அய்யப்பன் கோவில் அருகே குறுகிய வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயற்சித்தார். ஆனால், பஸ்சின் அச்சு திடீரென முறிந்தது.

இதனால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாக சென்று சாலையோரம் சென்ற ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. மேலும் எதிரே இருந்த மண் திட்டின் மீது மோதி நின்றது. விபத்தில் ஸ்கூட்டரில் வந்த கோத்தகிரி அருள்நகரை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் மகேந்திரன் (53) என்பவர் பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். மேலும் ரகுநாதனின் கால் இடிபாடுகளுக்குள் சிக்கியதால், வெளியே வர முடியாமல் தவித்தார்.

ஓட்டல் உரிமையாளர் பலி

கண்டக்டர் கிருஷ்ணராஜ் (43) மற்றும் பயணிகள் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த மகேந்திரன், ரகுநாதன் மற்றும் பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மகேந்திரன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஆனால், செல்லும் வழியிலேயே மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், மகேந்திரனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர் குன்னூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் காலை சிற்றுண்டியை வினியோகித்து விட்டு, தனது ஓட்டலுக்கு திரும்பி வரும்போது விபத்தில் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்