ரெயில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா?

ரெயில்களில் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முதியோர் கட்டண சலுகை எப்போது மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2022-11-15 19:04 GMT

கொரோனாவால் பறிப்பு

மூத்த குடிமக்களின் நலன் மற்றும் வசதிக்காக இந்திய ரெயில்வே வாரியம் 60 வயதை கடந்த ஆண் பயணிகளுக்கு 40 சதவீதமும், 58 வயதை கடந்த பெண் பயணிகளுக்கு 50 சதவீதமும் டிக்கெட் கட்டணத்தில் சலுகை அளித்து வந்தது. இதற்காக ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடியை ரெயில்வே வாரியம் செலவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் 3 மாதங்கள் ரெயில் சேவை முற்றிலும் முடங்கியதால், இந்த வருவாய் இழப்பை சமாளிக்க மூத்த பயணிகளுக்கான கட்டண சலுகையை ரெயில்வே வாரியம் பறித்துக்கொண்டது. இதற்கு மூத்த குடிமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் நாடாளுமன்ற ரெயில்வே நிலைக்குழு கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய அரசிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த கட்டண சலுகை ரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் படுக்கை வசதி, 3-ம் வகுப்பு ஏ.சி. வசதி பெட்டியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த சலுகையை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் ரத்து செய்யப்பட்ட இந்த கட்டணச் சலுகையை மீண்டும் அளிப்பது பற்றி எந்தவித நடவடிக்கையையும் எடுக்காமல் ரெயில்வே வாரியம் மவுனம் காத்து வருகிறது.

ஆன்மிக பயணம் குறைந்துவிட்டது

பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகை மீண்டும் எப்போது கிடைக்கும்? என்று முதியோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த மூத்த குடிமக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

கரூரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 65):- கொரோனா காலத்திற்கு முன்பு ரெயில்களில் கட்டண சலுகை இருந்தது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் சிலர் பென்ஷன் பெறுவார்கள். சிலர் பென்ஷன் பெறாமல் இருப்பார்கள்.

இவர்கள் சென்னை உள்ளிட்ட வெளியூர் மருத்துவமனைக்கு செல்லும் போது ரெயில்களில் கட்டண சலுகை இருந்தபோது பயன்உள்ளதாக இருந்தது. தற்போது கட்டண சலுகை இல்லாததால் முதியவர்கள் மனதளவில் கஷ்டத்தில் இருக்கிறார்கள். மேலும் ஆன்மிக பயணம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்வதும் குறைந்துவிட்டது. பஸ் கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவாக இருந்ததால், ரெயில்களில் சென்று வந்தனர். முதியவர்களுக்கு வருமானம் இல்லாத நேரத்தில் கட்டண சலுகை இல்லாமல் இருப்பது கஷ்டம் தான். அதனால் மீண்டும் கட்டண சலுகை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

லாப நோக்கோடு பார்க்கக்கூடாது

குளித்தலையை சேர்ந்த பெல் சீத்தாராமன் (64):-

முதியவர்கள் பஸ், கார் போன்றவற்றில் நீண்ட நேரம் தொடர்ந்து அமர்ந்து பயணம் செல்வது கடினம். இதனால் அவர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் பயணம் செய்ய தேர்வு செய்வது ரெயில் பயணத்தையே. அதுபோல் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை போன்ற சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ரெயில் பயணத்தையே விரும்புவார்கள்.

ஏனெனில் தங்களுக்கென்று தனி இருக்கை வசதி இருப்பதால் அவர்கள் தாராளமாக அமர்ந்து செல்ல முடியும். மேலும் கழிவறை இருப்பது அவர்களுக்கு மேலும் வசதியாக அமைந்துள்ளது. அரசு அனைத்து துறைகளையும் லாப நோக்கோடு பார்க்கக்கூடாது. ரெயில், பஸ் போன்ற சில துறைகளை சேவை நோக்குடன் செய்ய வேண்டும்.

ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும்

லாலாபேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி (75):- மத்திய அரசு ரெயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருப்பது அடித்தட்டு மக்களை மிகவும் பாதிக்கிறது. பாசஞ்சர் ரெயில்களில் சாதாரண குறைந்தபட்ச கட்டணமே ரூ.30 ஆக உள்ளது. இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட ஊருக்கு ரெயில் டிக்கெட் ரூ.30 என்றால் பொதுமக்கள் எப்படி ரெயிலில் செல்வார்கள்.

ஆனால் பஸ்சில் இதே தொலைவில் உள்ள ஊருக்கு சென்றால் ரூ.10 தான் செலவாகும். இப்படி ஒரேயடியாக கட்டணம் உயர்த்தியதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

அதேபோல் மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் போக போக இப்படியே கட்டணம் உயர்ந்தால் ஏழை மக்கள் ரெயிலை மறந்துவிடுவார்கள். எனவே ரெயில் கட்டணம் உயர்வை பரிசீலனை செய்து அதனை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மூத்த குடிமக்களுக்கு பழைய சலுகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரெயில்வே நிர்வாகம் முடிவு

இதுகுறித்து கரூர் ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, முதியவர்களுக்கு ரெயில்களில் கட்டண சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா காலத்தில் இந்த கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. இந்த கட்டண சலுகையை ரத்து செய்தது ரெயில்வே நிர்வாகம் தான். அதனை மீண்டும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்தால் நாங்கள் கொண்டு வர தயாராக இருக்கிறோம். முதியவர்களும் எங்களிடம் கட்டண சலுகை குறித்து கேட்டு வருகின்றனர். இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.

பச்சை கொடி காட்டுமா?

தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையே தாராள மனதுடன் பெண்களுக்கு இலவச பயண சலுகை, முதியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. ஆனால் லாபத்தில் இயங்கும் ரெயில்வே துறை ஏற்கனவே வழங்கி வந்த சலுகையை பறித்து நிறுத்தி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல.

எனவே ரெயில்வே நிர்வாகம் சிவப்பு கொடி காட்டி நிறுத்திவைத்திருக்கும் கட்டணச் சலுகைக்கு விரைவில் பச்சை கொடி காட்ட வேண்டும் என்பதே மூத்த பயணிகளின் எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்