சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள்

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15-ந் தேதி கடைசி நாள் என்று விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-19 18:45 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் காப்பீடு

விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், 2023-24-ம் ஆண்டு சாகுபடி செய்யும் சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 13 வட்டாரங்களில் உள்ள 797 வருவாய் கிராமங்களும் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. சம்பா நடவு செய்துள்ள விவசாயிகள், 15.11.2023-க்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம். விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக ஏ.ஐ.சி.ஐ.எல். என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரீமியம்-கடைசி நாள்

நெல்- II (சம்பா) பயிருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் ஏக்கருக்கு ரூ.492.75, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 15.11.2023, நெல் III (நவரை) பயிருக்கு பிரீமியம் ரூ.492.75, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 31.1.2024, உளுந்து பயிருக்கு பிரீமியம் ரூ.270.75, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 30.11.2023, மணிலாவுக்கு பிரீமியம் ரூ.432, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 17.1.2024, எள்ளுக்கு பிரீமியம் ரூ.157.5, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 31.1.2024, கரும்புக்குபிரீமியம் ரூ.2,750, காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாள் 30.3.2024.

பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். நடப்பு பசலி 1433 பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பதிவு செய்யும் விவசாயியின் பெயர், நிலப்பரப்பு, சர்வே எண், உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து விவசாயிகள் பதிவு செய்து கொள்ள வேண்டும். கடன் பெறும் விவசாயிகளுக்கு அவர்களின் ஒப்புதலை பெற்று பயிர் காப்பீடு செய்யும்படி வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவசாயிகள் காப்பீடு செய்த பிறகு, தாங்கள் பதிவு செய்த விவரங்களை சரிபார்த்து கொள்ளவும். பயிர் சாகுபடி செய்துள்ள கிராமம், வங்கி கணக்கு எண் மற்றும் IFSC Code ஆகியவை சரியாக உள்ளதா என பதிவு செய்த இடத்தில் சரிபார்த்து, தவறு இருந்தால் காப்பீடு செய்ய வேண்டிய கடைசி நாளுக்கு முன்னரே திருத்தம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்