குருசடியில் 12 பவுன் நகைகள் கொள்ளை

12 pounds of jewelery stolen from Kurusadi

Update: 2022-11-15 17:20 GMT

ஈத்தாமொழி, 

ஈத்தாமொழி அருகே உள்ள புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மிக்கேல் அதிதூதர் குருசடி

ஈத்தாமொழி அருகே உள்ள கேசவன்புத்தன்துறை மீனவ கிராமத்தில் தூய மாசற்ற திருஇருதய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத்துடன் குருசடி இருக்கிறது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் ஜெபம் செய்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஜெபம் செய்வதற்கு அப்பகுதியினர் சென்றனர். அப்போது புனித மிக்கேல் அதிதூதர் சொரூபத்தின் கதவு திறந்து கிடந்தது. மேலும், சொரூபத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகளும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். யாரோ மர்ம நபர்கள் குருசடிக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

போலீசார் தேடுகிறார்கள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா மற்றும் ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது குருசடியில் மோப்பம் பிடித்து விட்டு அருகில் உள்ள தூய மாசற்ற திருஇருதய அன்னை ஆலயம் வரை ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சொரூபத்தில் நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்ததை நன்கு அறிந்து நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பட்ட பகலில் ஊரின் மையப் பகுதியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் உள்ள மீனவ கிராமங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்