கோபி அருகே கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு

கோபி அருகே கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு

Update: 2023-06-29 22:11 GMT

கடத்தூர்

கோபி ராஜாஜிவீதியை சேர்ந்தவர் யுவராஜ். அவருடைய மனைவி சுதா (வயது 42). இவர்களுடைய மகள் தீட்சனா (17). யுவராஜின் தாய் ரத்தினம் (70) மற்றும் உறவினர் பரமேஸ்வரி (50) ஆகியோர் காரில் கோபியில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை யுவராஜ் ஓட்டி சென்றார். கரட்டூர் வளைவு அருகே சென்றபோது சத்தியமங்கலத்தில் இருந்து கவுந்தப்பாடி நோக்கி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக காரின் பின்னால் மோதியது.

இதில் யுவராஜின் கார் 100 மீட்டர் தூரம் முன்னால் தள்ளி செல்லப்பட்டு நின்றது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி நொறுங்கி சேதம் அடைந்தது. காரில் இருந்த 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதை பார்த்த பொதுமக்கள் லாரியை நிறுத்துமாறு சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு பயந்து டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு் கீழே இறங்கினார். அப்போது ஆத்திரமடைந்து டிரைவரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் இதுபற்றி கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சேதமடைந்த காரை பார்வையிட்டு் லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் பங்களாப்புதூரை சேர்ந்த மாதேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை சிகிச்சைக்காக ேபாலீசார் கோபி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்தை ஏற்படுத்தியதாக மாதேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை பொதுமக்கள் தாக்கியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்