துடரிப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு

பொறையாறு அருகே துடரிப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2023-06-28 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே துடரிப்பேட்டை கன்னிகா பரமேஸ்வரி கோவில் குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கன்னிகா பரமேஸ்வரி கோவில்

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே துடரிப்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த திட்டமிடப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் கோவில் அருகே யாகசாலை மண்டபம் அமைக்கப் பட்டு விக்னேஸ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மகாபூர்ணாகுதி செய்யப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜக்கப்பட்ட கடங்கள் புறப்பட்டு மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை சுற்றி வந்து கோபுர கலசத்தை அடைந்தன.

குடமுழுக்கு

அதனைத் தொடர்ந்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது. இந்த விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவரை கிராம மக்கள் ஏராளமானோர் முளைப்பாரி எடுத்து வந்து வரவேற்றனர்.

குடமுழுக்கு விழாவை தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் தேவஸ்தான ஆலய அர்ச்சகர் மகேஸ்வர குருக்கள் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். விழாவில் காழியப்பநல்லூர், தில்லையாடி,திருக்கடையூர்,டி.மணல்மேடு,கிள்ளியூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்