இளம்பெண், வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் நடவடிக்கை
கோவையில் நடந்த ரூ.3 கோடி நகை-பணம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இளம்பெண், வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பி மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கோவை
கோவையில் நடந்த ரூ.3 கோடி நகை-பணம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய இளம்பெண், வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க விமான நிலையங்களுக்கு 'லுக்-அவுட்' நோட்டீஸ் அனுப்பி மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
கோவை புலியகுளம் கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 63). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதால் கணவருடன் வெளியூரில் வசித்து வருகிறார். 2-வது மகள் வேலை காரணமாக வெளியூரில் உள்ளார்.
வீட்டில் தனியாக வசித்து வரும் ராஜேஸ்வரி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு தொழில் மூலம் சிங்காநல்லூரை சேர்ந்த வர்ஷினி (26) என்ற இளம்பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டது. அத்துடன் அவர், ராஜேஸ்வரிக்கு தன் மூலம் பலருக்கு நிலத்தை விற்பனை செய்து கொடுத்து உள்ளார்.
மயக்க மருந்து கொடுத்தார்
இதற்காக வர்ஷினி அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால், அவரை ராஜேஸ்வரிக்கு மிகவும் பிடித்து விட்டது. இதனால் அவருடன் தாயை போல பழகி வந்தார். ராஜேஸ்வரி தனது வீட்டில் எந்த உணவு செய்தாலும் அதை வர்ஷினிக்கு கொடுத்து வந்துள்ளார்.
அதுபோன்று வர்ஷினியும் தனது வீட்டில் செய்த உணவை ராஜேஸ்வரிக்கு கொடுத்து வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி வெளியூர் சென்று வீடு திரும்பிய ராஜேஸ்வரிக்கு, வர்ஷினி இட்லியும், கோழிக்குழம்பும் கொடுத்தார். ஆனால் அதில் மயக்க மருந்து கலந்து இருந்தார். இதை அறியாமல் சாப்பிட்ட ராஜேஸ்வரி, மயங்கிவிட்டார்.
3 பேர் கைது
பின்னர் வர்ஷினி தனது ஆண் நண்பர்கள் மூலம் அந்த வீட்டின் பீரோவில் இருந்த ரூ.2½ கோடி ரொக்கம், 100 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகள், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றார். இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
தொடர்ந்து வர்ஷினியுடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் செய்து வரும் அருண்குமார் (37), சுரேந்தர், பிரவீன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் ரொக்கம், 31 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
மேலும் தலைமறைவாக உள்ள இளம்பெண் வர்ஷினி, அவருடைய கார் டிரைவர் நவீன்குமார் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
வர்ஷினி மீது கோவை மாநகர பகுதியில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் 20-க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் உள்ளன. அவர் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து, பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் வாங்கி உள்ளார்.
'லுக்-அவுட் நோட்டீஸ்'
மேலும் விலை உயர்ந்த சொகுசு காரில் செல்வதைதான் அவர் வழக்கமாக வைத்துள்ளார். தற்போது அவர் தலைமறைவாக இருப்பதால் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க கோவை, மதுரை, திருச்சி, சென்னை, கொச்சி, கோழிக்கோடு உள்பட பல்வேறு விமான நிலையங்களுக்கு 'லுக்-அவுட்' நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.
அவருடைய கூட்டாளிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்ததால், வர்ஷினியும் அந்த பகுதியில்தான் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே திருவள்ளூர் மாவட்டத்துக்கு சென்று தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். வர்ஷினியை பிடித்த பின்னர்தான், அவர் எத்தனை பேரிடம், எவ்வளவு பணம் மோசடி செய்து உள்ளார்?, இந்த மோசடியில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.