உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வு

வால்பாறை நகராட்சியில் உள்ள உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2023-03-11 18:45 GMT

வால்பாறை, 

வால்பாறை நகராட்சியில் உள்ள உரக்கிடங்கில் தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திடக்கழிவு மேலாண்மை திட்டம்

வால்பாறை நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாழைத்தோட்டம் பகுதியில் ஸ்டேன்மோர் எஸ்டேட் செல்லும் வழியில் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் எந்திரம் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக பிரத்யேக எந்திரங்கள் உள்ளன. குப்பைகளில் உள்ள கழிவுநீரை அகற்றி, குப்பையை உலர்த்தி தொட்டிகளில் சேகரித்து வைக்கும் வகையில் தரம் பிரிக்கும் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தற்போது சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் உரம் தயாரிக்கும் பணியை மேம்படுத்தி, உரங்கள் தயார் செய்து குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் ஆய்வு

இந்தநிலையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தின் தூய்மை பாரத இந்தியா திட்ட பணிகளுக்கான அதிகாரிகள் கவுதம், ஜான் ஆகியோர் வால்பாறை நகராட்சியில் உரம் தயாரிக்கும் கிடங்கை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இறைச்சி கழிவுகளை தனியாகவும், மக்கும் குப்பைகளை தனியாகவும் சேகரித்து வைத்து உரம் தயாரிக்கும் பணிக்கு பயன்படுத்த வேண்டும். மக்கும் குப்பையையும், இறைச்சி கழிவுகளையும் சேர்த்து உரம் தயாரிக்க பயன்படுத்தக்கூடாது, குப்பைகளில் உள்ள கழிவுநீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும். தூய்மை பணியாளர்கள் சேகரித்து வரும் குப்பைகளை நன்றாக உலர்த்திய பின்னர் உரம் தயாரிக்க பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து நகராட்சி ஆணையாளர் பாலுவுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் உர கிடங்கில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதன் மூலம் விரைவில் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில், தரமான உரங்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. ஆய்வின் போது நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்