சாலை அமைக்கும் பணிகளால் பஸ் நிறுத்தம்

மோர்தானா கிராமத்தில் சாலை அமைக்கும் பணியால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-23 17:56 GMT

சாலை அமைக்கும் பணி

மோர்தானா கிராமத்திற்கு குடியாத்தத்தில் இருந்து 5 முறை டவுன் பஸ் சென்று வருகிறது. மோர்தனா மற்றும் அப்பகுதியில் உள்ள ஜங்காலபல்லி, போடியப்பனூர், ராகிமானப்பல்லி கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இந்த டவுன் பஸ்சை நம்பியே உள்ளனர்.

இந்தநிலையில் சைனகுண்டா கூட்ரோட்டில் இருந்து மோர்தானா கிராமம் வரை 9 கிலோமீட்டர் தூரம் உள்ள சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள இருந்தது. தற்போது மத்திய அரசின் பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கும் பணிக்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கியது.

சாலை மறியல்

இதனால் கடந்த சில நாட்களாக குடியாத்தத்தில் இருந்து மோர்தானா கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் சைனகுண்டா கூட்ரோடு வரை சென்று பின்னர் குடியாத்தம் திரும்பி வருகிறது. இதனால் 9 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் மோர்தானா கிராமத்திற்கு செல்ல முடியவில்லை. மோர்தானா கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்களும் கடந்த சில நாட்களாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

காட்டுப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இருசக்கர வாகனங்களில் செல்லவும் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நிறுத்தப்பட்ட டவுன் பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி நேற்று காலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் திடீரென சைனகுண்டா-மோர்தானா கூட்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று பேச்சுவார்த்தை நடத்தி உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று மீண்டும் மோர்தானா பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்