பா.ஜனதா கவுன்சிலர்கள் 'திடீர்' உள்ளிருப்பு போராட்டம்

BJP councilors 'sudden' sit-in

Update: 2022-11-15 21:05 GMT

தக்கலை:

பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் பா.ஜனதா கவுன்சிலர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரவேற்பு பலகைகள்

தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் கோட்டை வாசலில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு அந்த வரவேற்பு பலகையின் அருகே தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்துடன் வரவேற்பு பலகை வைக்கப்பட்டது.

இதனால் பா.ஜனதா மற்றும் தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க.வினர் வைத்த வரவேற்பு பலகையை அகற்ற வேண்டும் என பா.ஜனதா கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும், இதுகுறித்து நகராட்சி கூட்டத்திலும் வலியுறுத்தினர்.

இந்த பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை மேற்கொண்டு பிரச்சினைக்குரிய இரண்டு வரவேற்பு பலக்கையையும் அப்புறம் படுத்த உத்தரவு விட்டது. இதையடுத்து நேற்று காலை 11 மணியவில் நகராட்சி அதிகாரிகள் இரண்டு வரவேற்பு பலகையையும் அகற்றினர்.

பாரத மாதா படம்

அப்போது இந்த வரவேற்பு பலகைகள் இருந்த இடத்தில் இருந்து சற்று தூத்தில் கோட்டை சுவரில் வைக்கப்பட்டிருந்த பாரதமாதா படம் பதித்த பலகையும் அகற்றப்பட்டது. இதற்கு பா.ஜனதாவினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாரதமாதா படத்தை மீண்டும் அதே இடத்தில் வைக்ககோரி பா.ஜனதா கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணிக்கு பா.ஜனதா மாவட்ட செயலாளரும் கவுன்சிலருமான உண்ணிகிருஷ்ணன் தலைமையில் கவுன்சிலர்கள் நாகராஜன், ஷீபா, பிரியதர்சினி, கீதா, ஸ்ரீதேவி, சிவா, செந்தில்குமார், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் மற்றும் பா.ஜனதாவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ெதாடர்ந்து இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையர் லெனின் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

உள்ளிருப்பு போராட்டம்

இதனையடுத்து பா.ஜனதா கவுன்சிலர்கள், ஆணையரின் அறையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நகராட்சி தலைவர் அருள் சோபன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 'பாரதமாதா படத்தை எடுத்த இடத்தில் வைத்தால்தான் வெளியே செல்வோம்' என கவுன்சிலர்கள் கூறினர்.

இதனையடுத்து அந்த படம் கோட்டை சுவரில் வைக்கும்படி கவுன்சிலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டனர். அத்துடன் அந்த படம் மீண்டும் பத்மநாபபுரம் கோட்டை சுவரில் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்