மாற்றுத்திறனாளி வீராங்கனை: அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி மதுரைக்கு பெருமை தேடித்தந்த ஜெர்லின் அனிகா- பாராட்டுகள் குவிகிறது

அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி மதுரைக்கு பெருமை தேடித்தந்த ஜெர்லின் அனிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Update: 2022-11-15 19:19 GMT


அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி மதுரைக்கு பெருமை தேடித்தந்த ஜெர்லின் அனிகாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அர்ஜூனா விருது

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு மதுரை வீராங்கனை ஜெர்லின் அனிகா ஒரு முன்மாதிரி.

மதுரை அவனியாபுரம் கிளாட்வே சிட்டி பகுதியை சோ்ந்த ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியின் மகள்தான் அவர்.

18 வயது நிரம்பிய ஜெர்லின் அனிகா, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் பிறவியிலேயே வாய் பேசமுடியாத மற்றும் காதுகேட்காத மாற்றுத்திறனாளி ஆவார். பூப்பந்து போட்டியில் (பேட்மிண்டன்) செய்த சாதனைக்காக மத்திய அரசு இவரை அர்ஜூனா விருதிற்கு தேர்வு செய்துள்ளது. நேற்று முன்தினம் இதற்கான அறிவிப்பு வெளியானது. எனவே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

பல்வேறு சாதனைகள்

8 வயதில் இருந்தே பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்தார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அவர் நேரடியாக மாற்றுத்திறனாளிகளுக்கான காதுகேளாதோருக்கான பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

அதன் மூலம் 2017-ம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5-வது இடமும், 2018-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப்பதக்கங்களும், 1 வெண்கல பதக்கமும் வென்றார். தனது பயிற்சியை தீவிரப்படுத்தி சீனாவின் தைபேயில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 1 தங்கப்பதக்கமும், 2 வெள்ளிப்பதக்கங்களும், 1 வெண்கல பதக்கமும் பெற்றார். அதன் பின்னர் கடந்த மே மாதம் பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் தனிநபர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு, பெண்கள் இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 தங்க பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்தார்.

தந்தை-பயிற்சியாளர்

தனிநபர் ஒருவர் குறைந்த வயதில் இத்தனை சாதனை படைத்ததுதான், விளையாட்டு துறையில் உயரிய விருதான அர்ஜூனா விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட காரணம் ஆகும்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான காதுகேளாதோருக்கான பிரிவில் குறைந்த வயதில் அர்ஜூனா விருது பெறப்போகும் வீராங்கனையாக திகழ்கிறார்.

இதுகுறித்து ஜெர்லின் அனிகாவின் தந்தை ஜெயரட்சகன் கூறும்போது,

ஜெர்லின் அனிகாவுக்கு 1½ வயதாக இருந்தபோதுதான் அவருக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதை அறிந்தோம். இதனால் எனது மகளின் எதிர்காலத்தை நினைத்து கவலை அடைந்தோம். பேட்மிண்டன் விளையாடும் இடத்திற்கு 8 வயதில் ஜெர்லின்அனிகாவை அழைத்து சென்ற போது அதனை மிகவும் உன்னிப்பாக கவனித்தாள். அவளுக்கு மாற்றுத்திறனாளிக்கான பயிற்சியாளர் ரஞ்சித்குமார் பயிற்சி அளித்தார். தற்போது அர்ஜூனா விருது பெரும் அளவுக்கு என் மகள் உயர்ந்துள்ளார் என்பதை நினைக்கையில் பெருமையாக உள்ளது, என்றார்.

தற்போது ஜெர்லின் அனிகாவுக்கு பயிற்சி அளிக்கும் சரவணன் கூறும்போது, ஜொ்லின்் அனிகாவிடம் பேட்மிண்டன் மட்டையை கொடுத்து விளையாட கூறினேன். அன்றிலிருந்து இன்று வரை இந்த விளையாட்டு போதும் என்று என்னிடம் தெரிவித்ததில்லை. ஆர்வமே அவரது வெற்றிக்கான காரணம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்