நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்; மாணவ-மாணவிகளை பூக்கள் கொடுத்து வரவேற்றனர்

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. புதிய மாணவ-மாணவிகளுக்கு மூத்த மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

Update: 2022-11-15 19:02 GMT

நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. புதிய மாணவ-மாணவிகளுக்கு மூத்த மாணவர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர்.

வகுப்புகள் தொடக்கம்

பிளஸ்-2 படிப்பை முடித்த மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு நேற்று வகுப்புகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி மாணவ-மாணவிகள் நேற்று காலை நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள மருத்துவக்கல்லூரிக்கு வந்தனர். மூத்த மாணவர்கள், புதிய மாணவர்களுக்கு மரக்கன்று மற்றும் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். அந்த மரக்கன்றுகளை மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் நட்டனர்.

மருத்துவ வல்லுனர்கள்

தொடர்ந்து நடந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் எழில் ரம்யா வரவேற்று பேசினார். மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி பாரம்பரியமிக்கது. இங்கு தரமான உணவகம், விடுதி, குடிநீர் போன்ற வசதிகளும், மருத்துவ பயிற்சி அளிக்க அனுபவம் மிக்க, திறமையான டாக்டர்களும் உள்ளனர். மாநில அளவில் இந்த கல்லூரி 2-வது இடத்தில் உள்ளது. முதலாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மாணவர்கள் முழு கவனத்தையும் கல்வியில் செலுத்த வேண்டும். சிறந்த மருத்துவ வல்லுனர்களாக உருவாக வேண்டும் என்ற குறிக்கோளோடு படிக்க வேண்டும்'' என்றார்.

இதில் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பேசினார்கள். தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்தது. முன்னதாக ஆசிரியர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்