அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே பிலிச்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 44). இவருக்கு திருமணமாகி சுகுணா(30) என்ற மனைவியும், பவகீதனி(7) என்ற மகளும், மகிழ்வேந்தன்(2) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர் 2 மாதங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான பிலிச்சிக்குழி கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை நடந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த கண்ணன் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் சிறிதுநேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மனைவி சுகுணா தனது சேலையால் வீட்டில் தூக்கிட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கண்ணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி வழக்குப்பதிந்து சுகுணாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.