அரசு ஊழியர்கள் நடைபயணம்

staff

Update: 2022-11-15 18:51 GMT


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட சி.பி.எஸ்.(புதிய ஓய்வூதியம்) ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபயணம் நேற்று காலை வீரபாண்டி பிரிவில் இருந்து தொடங்கியது. இதற்கு சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார். நடைபயணத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஞானசேகரன் தொடங்கிவைத்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள், சீருடை பணியாளர்களுக்கு கடந்த 1-4-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 6 லட்சம் ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட ஓய்வு கால பலன்கள் இந்த திட்டத்தில் இல்லாததால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வரப்பட்டது.

கடந்த 2016, 2021 ஆகிய தேர்தல்களில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி 6 லட்சம் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி இந்தநடைபயணம் நடைபெற்றது. பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் விளக்கக்கூட்டம் நடைபெற்றது.

பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் குப்புசாமி, மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சி.பி.எஸ். ஒழிப்பு சங்க நிதி காப்பாளர் பிரேமலதா நன்றி கூறினார். பின்னர் முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்