தென்காசி பெண் போலீஸ்- கணவருக்கு கொலை மிரட்டல்; போலீஸ்காரர் கைது

தென்காசி பெண் போலீஸ், கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-15 18:45 GMT

தென்காசி பெண் போலீஸ் மற்றும் அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பெண் போலீசுக்கு தொந்தரவு

நெல்லை மேலப்பாளையம் குறிச்சி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மார்த்தாண்டம். இவர் நெல்லை டவுண் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தபோது, அவருக்கும், 41 வயதான பெண் போலீஸ் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிந்ததும், அந்த பெண் போலீஸ் தென்காசி மாவட்டத்துக்கும், மார்த்தாண்டம் சிவகங்கை மாவட்டத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

அதன்பிறகு பெண் போலீஸ், மார்த்தாண்டத்திடம் பேசவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் அவர் பணி செய்யும் இடத்துக்கு மார்த்தாண்டம் அடிக்கடி வந்து, கணவர், குழந்தைகளை விட்டு விட்டு தன்னுடன் வருமாறு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

இந்த நிலையில் நேற்று பெண் போலீஸ் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பணியில் இருந்தார். அப்போது மார்த்தாண்டம் மேலும் ஒருவருடன் ஒரு காரில் அங்கு வந்து, பெண் போலீசை பார்த்து காரில் வந்து ஏறுமாறு கையால் சைகை காட்டி உள்ளார். உடனடியாக அவர் தனது கணவருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு கலெக்டர் அலுவலகம் வருமாறு கூறியுள்ளார்.

அவரது கணவர் அங்கு வந்ததும் மார்த்தாண்டம் காரில் இருந்து இறங்கி, பெண் போலீசை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து தகராறு செய்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரையும், அவரது கணவரையும் கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து காரில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ்காரர் கைது

இதுகுறித்து பெண் ேபாலீஸ் அளித்த புகாரின் பேரில் தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மார்த்தாண்டத்தை நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் தென்காசி போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்