உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சி மன்ற கூட்டத்தில், துணைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
கணக்கம்பாளையம் ஊராட்சி
உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது கணக்கம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சி தலைவராக லதா என்கிற காமாட்சி அய்யாவும், துணைத்தலைவராக எஸ்.பாஸ்கரும் இருந்து வருகின்றனர்.
தற்போது இந்த ஊராட்சியில் 13 வார்டு உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) உள்ளனர். இதில் 6 உறுப்பினர்கள் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாகவும்,
6 உறுப்பினர்கள் துணைத்தலைவருக்கு ஆதரவாகவும் (இருதரப்பிலும் சமமான பலம். அதாவது ஒருபக்கம் தலைவரை சேர்த்து 7 பேர், மற்றொரு பக்கம் துணைத்தலைவரை சேர்த்து 7 பேர்) இருப்பதாக கூறப்படுகிறது.
ஊராட்சி கூட்டம்
இந்த நிலையில் ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று பிற்பகல் கூடியது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் லதா என்கிற காமாட்சி அய்யாவு தலைமை தாங்கினார். கூட்டத்தில் 13 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவாதிப்பதற்காக நிகழ்ச்சி நிரழில் (அஜெண்டா) 21 தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன. இதில் துணைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் ஆட்சேபனை காரணமாக காசோலை பவர் தொடர்பான ஒரு தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில் கூட்ட நிகழ்ச்சி நிரழில் இடம் பெற்றிருந்த தீர்மானங்களில் மேலும் 3 தீர்மானங்களை நிறைவேற்ற துணைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊராட்சி தலைவர், கூட்டம் முடிந்தது என்று கூறியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவரும் (தலைவர்) அவரது ஆதரவாளர்களும் கூட்ட அறையை விட்டு வெளியே புறப்பட்டனர்.
துணைத்தலைவர் உள்ளிருப்பு போராட்டம்
ஆனால் துணைத்தலைவர் எஸ்.பாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 6 பேர் என மொத்தம் 7 பேர் அங்கு கூட்டம் நடந்த அறைக்குள்ளேயே உட்கார்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மு.கந்தசாமி மாலை 6 மணியளவில், ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, ஏற்கனவே துணைத்தலைவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சேபனை செய்யப்பட்டதால், ரத்து செய்யப்பட்டிருந்த ஒரு தீர்மானம் தவிர மற்ற 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதைத்தொடர்ந்து இரவு 7.45 மணிக்கு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.