குற்ற சம்பவங்களை தடுக்க ஸ்மார்ட் காவலர் செயலி

Smart Guard app to prevent crime incidents

Update: 2022-11-15 17:08 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க ஸ்மார்ட் காவலர் செயலியை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிமுகம் செய்தார்.

ஸ்மார்ட் காவலர் செயலி

தமிழக முழுவதும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக ஸ்மார்ட் காவலர் செயலி (இ பீட்) டி.ஜி.பி.யால் அறிமுகபடுத்தப்பட்டது. அதன்படி இச்செயலியை திருப்பத்தூர் மாவட்டத்தில் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது.

போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி ஸ்மார்ட் காவலர் செயலியை அறிமுகம் செய்து, செயல்படும் விதம் குறித்தும், அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுகுறித்தும் போலீசாருக்கு விளக்கம் அளித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

துல்லியமாக கண்காணிக்க

மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் முன்மாதிரியாக ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் பணி நியமிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இச்செயலி மூலம் வங்கிகள், வங்கி ஏ.டி.ம்., அரசு அலுவலகங்கள், நகைக்கடைகள், பூட்டிய வீடுகள் மற்றும் தனியாக உள்ள வயது முதிர்ந்த நபர்களை பகல் மற்றும் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் மூலம் துல்லியமாக கண்ணிக்கும் வகையில் அந்தந்த பகுதிக்கு நேரில் சென்று புகைப்படமாகாவோ, வீடியோவாகவோ பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியின் மூலம் கெட்ட நடத்தைக்காரர்களின் நடத்தையை கண்காணிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தனிக்கையின் போது சந்தேகப்படும் நபர்கள் மற்றும் வாகனங்களை செயலியின் முலம் சோதனை செய்து விவரங்களை சரிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காணிப்பு கேமரா

அதன் விவரங்கனை அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் தனித்தனியாக ஆய்வு செய்யும் வகையில் உள்ளது.

மேலும் குற்றசெயல்களை தடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் தங்களது வங்கி கிளையின் முகப்பில் சாலையில் செல்வோர்களை கண்காணிக்கும் வகையில் 2 கேமராக்கள் பொருத்த முன்வரவேண்டும். இதேபோல் முக்கிய தெருக்களிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்களது ஏரியா பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்