விபத்தில் பள்ளி ஆசிரியர் பலி
கச்சிராயப்பாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் பள்ளி ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
கச்சிராயப்பாளையம் அருகே கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சாந்தன் மகன் குமார் (வயது 47). இவர் கச்சிராயப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் மோட்டார் சைக்கிளில் விட்டுக்கு புறப்பட்டார். அம்மாபேட்டை கிராமபகுதியில் சென்ற போது, குமாரின் மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த சரக்கு வாகனமும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த குமார் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.