சத்தி அருகே கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு: விரைவில் சீரமைக்கப்பட்டு தண்ணீர் திறந்து விடப்படும்; அமைச்சர் சு.முத்துசாமி தகவல்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

Update: 2022-11-07 00:06 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு விரைவில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

சீரமைப்பு பணி

சத்தியமங்கலத்தை அடுத்த தங்க நகரத்தில் உள்ள கீழ்பவானி கிளை வாய்க்காலில் மதகு உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் வாய்க்கால் மேல்பகுதியில் ஓட்டை விழுந்தது. இதனால் தண்ணீர் வேகமாக வெளியேறியது. எனவே பவானிசாகர் அணையில் இருந்து வாய்க்காலுக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை பொறியாளர்கள் உடைந்த கால்வாயை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து ரூ.30 லட்சம் செலவில் புதிதாக 8 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலத்தில் புதிதாக கான்கிரீட் கிளை வாய்க்கால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்கால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அமைச்சர்கள் ஆய்வு

கட்டுமான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் நேற்று மாலை உடைப்பு ஏற்பட்ட தங்க நகரம் பகுதி கிளை வாய்க்காலுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் நீர்வள பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அமைச்சர்கள், கட்டுமான பணிகளை விரைவில் முடித்து வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

விரைவில் தண்ணீர் திறப்பு

பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறும்போது, 'தங்க நகரம் கிளை வாய்க்காலில் சீரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்காக கடந்த 10 நாட்களாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. விரைவில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு வருகிற செவ்வாய்க்கிழமை (8-ந் தேதி) தண்ணீர் திறந்து விடப்படும்.

தற்போது நீர்வளத்துறை சார்பில் இது போன்ற வலுவிழந்த கிளை இடங்களை அடையாளம் கண்டு முன்கூட்டியே சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இதுசம்பந்தமாக இருதரப்பு விவசாயிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

பேட்டியின்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்