சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்து மீனவர்கள் போராட்டம்

சாமியார்பேட்டையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை கண்டித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-09 18:38 GMT

பரங்கிப்பேட்டை, 

சுருக்குமடி வலை

தமிழகத்தில் சுருக்குமடி வலை மற்றும் விசை படகுகளில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் அரசு தடையை மீறி சுருக்குமடி வலை மற்றும் படகுகளில் அதிக திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

இதனால் மற்ற மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சில மீனவர்கள் அரசு விதிமுறைகளை மீறி தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர்.

நடவடிக்கை

இந்த நிலையில் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கிராமத்தில் மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம், பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது குடும்பத்துடன் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடற்கரையோரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சுருக்குமடி வலை மற்றும் படகுகளில் அதிக திறன் கொண்ட என்ஜினை பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். மீனவர்களுக்கு ஆதரவாக பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மற்றும் பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இது பற்றி தகவல் அறிந்த கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியம், தாசில்தார் ரம்யா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று மீனவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்