மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்த வாலிபர் கைது

மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் பணிப்பெண்ணை வாலிபர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-08 19:00 GMT

மும்பை, 

மஸ்கட்டில் இருந்து மும்பை நோக்கி வந்த விமானத்தில் பணிப்பெண்ணை வாலிபர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர்.

வங்கதேச பயணி

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் இருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று புறப்பட்டது. மும்பை வழியாக செல்லும் அந்த விமானத்தில் வங்கதேசத்தை சேர்ந்த முகமது துலால்(வயது 30) என்ற வாலிபர் பயணித்தார். விமானம் அதிகாலையில் மும்பையில் தரையிறங்கும் சற்று நேரத்திற்கு முன்பு பயணி முகமது துலால் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து 22 வயது பணிப்பெண்ணை கட்டிப்பிடித்தார். மேலும் அந்த பெண்ணை முத்தமிட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த பணிப்பெண் கத்தி கூச்சலிட்டார். மற்ற பயணிகள் அவரை தட்டிக்கேட்டனர். ஆனால் அவர்களை முகமது துலால் திட்டினார். இதனால் விமானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது

விமானம் மும்பையில் தரையிறங்கியதும் பணிப்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்ற முகமது துலாலை விமான நிலைய அதிகாரிகள் சாகர் போலீசில் ஒப்படைத்தனர். விமான பணிப்பெண் கொடுத்த புகாரின் பேரில், பயணி முகமது துலால் மீது போலீசார் பாலியல் தொல்லை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது முகமது துலால் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அவரது வக்கீல் வாதாடினார். இருப்பினும் அவரை போலீஸ் காவலில் ஒப்படைத்து கோர்ட்டு உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்