ஜல்னாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? - சஞ்சய் ராவத் கேள்வி

ஜல்னாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? என சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2023-09-04 18:45 GMT

மும்பை, 

ஜல்னாவில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார்? என சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜல்னா தடியடி சம்பவம்

ஜல்னாவில் மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. வன்முறையில் 40 போலீசார் உள்பட பலர் காயமடைந்தனர். 15 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மராத்தா சமூகத்தினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவிட்டது யார்?

இந்தநிலையில் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- உயர் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து போன் செய்தது யார்?. உள்ளூர் போலீசார் ஒரு போதும் தடியடி நடத்தி, துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுடமாட்டார்கள். போலீசாருக்கு தடியடி நடத்த உத்தரவிட்டது யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். ஜெனரல் டயர் மனநிலையுடன் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, 2 துணை முதல்-மந்திரிகளும் செயல்படுகின்றனர். அவர்கள் அமைதியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த மராத்தா சமூகத்தினர் மீது தடியடி மற்றும் துப்பாக்கியால் சுட உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்