'வெள்ளை வாவல்' மாநில மீனாக அறிவிப்பு
அழிந்து வரும் 'வெள்ளை வாவலை' மாநில மீனாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.;
மும்பை,
அழிந்து வரும் 'வெள்ளை வாவலை' மாநில மீனாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது.
அழிந்து வரும் வாவல் மீன்
கடல் மீன்களில் மிகவும் சுவையான மீனாக வெள்ளை வாவல் (சில்வர் பாம்ரெட்) மீன் அரியப்படுகிறது. எனவே பொது மக்கள் வாவல் மீன்களை விரும்பி சாப்பிடுகின்றனர். மராட்டியத்தில் 'பாப்ளட்', 'சாரங்கி' என பரவலாக அழைக்கப்படுகிறது. சமீபகாலமாக வாவல் மீன்கள் அழிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சிறிய அளவிலான வாவல் மீன்களை மீனவர்கள் சட்டவிரோதமாக அதிகளவில் பிடிப்பதால், அந்த மீன் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
மாநில மீனாக அறிவிப்பு
இந்தநிலையில் வெள்ளை வாவலை மாநில மீனாக மராட்டிய அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான அரசு ஆணையை மாநில வனம் மற்றும் மீன்வளத்துறை பிறப்பித்து உள்ளது. அந்த ஆணையில், 'சர்வதேச இயற்கை பாதுகாப்பு கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வெள்ளை வாவல் மீன் இனம் குறைந்து வருவதாக கூறியுள்ளது. மராட்டியத்தில் வாவல் மீன் பிடி குறைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. வெள்ளை வாவலை பாதுகாப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் வெளியிடப்படும்' என கூறப்பட்டுள்ளது.