சிவசேனா பிளவுக்கு உத்தவ் தாக்கரே செயல்பாடு தான் காரணம் - தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
சிவசேனாவின் பிளவுக்கு உத்தவ் தாக்கரேவின் செயல்பாடு தான் காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
சிவசேனாவின் பிளவுக்கு உத்தவ் தாக்கரேவின் செயல்பாடு தான் காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
குற்றச்சாட்டு
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இயங்கிய உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது.
இந்த பிளவுக்கு பா.ஜனதா தான் காரணம் என சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
செயல்பாடு தான் காரணம்...
மராட்டியத்தில் ஏற்பட்ட அரசியில் நிலைதன்மையின்மை மற்றும் நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே காரணமாவார். சிவசேனாவின் பிளவுக்கும் அவரது செயல்பாடு தான் காரணம். 40 எம்.எல்.ஏ.க்கள் அவரது மகாவிகாஸ் அகாடி கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போதும் வழக்கமாக , "நீங்கள் எனது அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறுவார்" ஆனால் நான், "உங்கள் அரசு ஒரு நாள் கவிழும் அதை நீங்கள் உணர மாட்டீகள் என்று கூறுவேன். கடைசியில் நான் கூறியது தான் நடந்துள்ளது.
மாற்று கூட்டணி
பா.ஜனதாவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க மக்கள் அளித்த தீர்ப்பை உத்தவ் தாக்கரே மாற்று கூட்டணி அமைத்து கேலி செய்தார். நாங்கள் கூட்டணியாக போட்டியிட்டபோது ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அடுத்த முதல்-மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் என்று கூறினர். அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மேடையில் அமர்ந்து கைத்தட்டினார். ஆனால் பேராசை திறன் அதிகரிக்கும்போது, இதுபோன்ற முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.