ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர் - குற்றச்சாட்டை மறுத்தனர்

ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்கள் தங்களது குற்றச்சாட்டை மறுத்தனர்.;

Update:2023-08-22 01:00 IST

மும்பை, 

ராகுல் செவாலே தொடர்ந்த அவதூறு வழக்கில் முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜராகினர். அவர்கள் தங்களது குற்றச்சாட்டை மறுத்தனர்.

அவதூறு வழக்கு

ஒன்றுப்பட்ட சிவசேனா கட்சி சார்பாக மும்பை தென் மத்திய நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ராகுல் செவாலே. அவர் சிவசேனா உடைந்த பிறகு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியில் இணைந்தார். மேலும் சிவசேனா நாடளுமன்ற குழு தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், இவர் குறித்து செய்தி ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. அதில் "ராகுல் செவாலே பாகிஸ்தானின் கராச்சியில் ஓட்டல் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களில் ஈடுபடுவதாக" கூறப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து ராகுல் செவாலே பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சாம்னா பத்திரிகையின் தலைமை ஆசிரியரான உத்தவ் தாக்கரே மற்றும் நிர்வாக ஆசிரியரான சஞ்சய் ராவத் ஆகியோர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

ரொக்க ஜாமீன்

அவர் தனது மனுவில், "சாம்னா பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றிலுமாக மறுக்கிறேன். இது பொதுமக்கள் முன் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எனது அரசியல் வாழ்க்கையை பலவீனப்படுத்தும் முயற்சியாகும். எனவே உத்தவ் தாக்கரே மற்றும் சஞ்சய் ராவத் மீது அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த அவதூறு வழக்கு நேற்று பெருநகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் ராவத் எம்.பி. நீதிபதி எஸ்.பி. காலே முன்பு ஆஜரானார். அதேநேரம் உத்தவ் தக்கரே காணொலி காட்சி மூலம் ஆஜரானார். நீதிபதி அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை படித்த பின்னர், இருவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர். இதையடுத்து கோர்ட்டு அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க ஜாமீன் அளித்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (செப்டம்பர்) 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்