மும்பை அருகே சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி

மும்பை- புனே விரைவு சாலையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

Update: 2022-12-12 18:45 GMT

மும்பை, 

மும்பை- புனே விரைவு சாலையில் சுற்றுலா பஸ் கவிழ்ந்து 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

பஸ் கவிழ்ந்து விபத்து

மும்பை செம்பூரில் உள்ள பிரபல தனியார் பயிற்சி மையத்தில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் மற்றும் 2 ஆசிரியர்கள் லோனாவாலா அருகில் உள்ள தீம் பார்க்கிற்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு லோனாவாலாவில் இருந்து செம்பூர் நோக்கி சொகுசு பஸ்சில் வந்து கொண்டு இருந்தனர்.

இரவு 8 மணியளவில் மும்பை- புனே விரைவு சாலையில் நவிமும்பை அருகே கொப்போலி பகுதியில் உள்ள மேஜிக் பாயின்ட் மலை பகுதியில் வந்தபோது, திடீரென பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதில் பஸ் சாலையோரம் கவிழ்ந்தது. இந்த பயங்கர விபத்தில் பஸ்சில் இருந்த சுமார் 40 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காயமடைந்தனர்.

2 மாணவர்கள் பலி

தகவல் அறிந்து சென்ற போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஹிரிதிகா கன்னா(வயது17), ராஜ் மாத்ரே (16) என்ற 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சில மாணவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசாக காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுற்றுலா சென்ற இடத்தில் விபத்தில் சிக்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் செம்பூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்