கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் - ஆதித்ய தாக்கரே வலியுறுத்தல்
மும்பையில் உள்ள கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
மும்பையில் உள்ள கிழக்கு, மேற்கு விரைவு சாலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் என ஆதித்ய தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.
சுங்க கட்டணம் வசூலை நிறுத்த வேண்டும்
முன்னாள் மந்திரி ஆதித்ய தாக்கரே, மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சாகலுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் மும்பை மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மேற்கு, கிழக்கு விரைவு சாலைகளில் சுங்க கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதி உள்ளதாவது:- சாலைகளின் தரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், குறைந்தபட்சம் சுங்க கட்டணம் வசூலிப்பதை நிறுத்தினால் மும்பைவாசிகளுக்கு உடனடியாக சிறிது நிவாரணம் கிடைக்கும். மும்பை நுழைவு பகுதியில் உள்ள சுங்க சாவடிகள் தேவையில்லாத இடையூறு, போக்குவரத்து பாதிப்பு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. அவை பயணிகளின் நேரம், மற்றும் பணத்தை வீணாக்குகிறது.
இருமுறை கட்டணம் செலுத்த முடியாது
சாலையை மாநகராட்சி பராமரிக்கும் போதும், சுங்க சாவடியில் வசூலிக்கப்படும் பணம் மாநில சாலை மேம்பாட்டு கழக கருவூலத்துக்கு தான் செல்கிறது. பொது மக்கள் மும்பை மாநகராட்சிக்கு 'தெரு வரி' கட்டுகின்றனர். அப்படி இருக்கும் போது மும்பை மாநகராட்சி பராமரிக்கும் சாலைக்கு, மாநில சாலை மேம்பாட்டு கழகத்துக்கு மும்பைவாசிகள் ஏன் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்?. மோசமாக பராமரிக்கப்படும் நெடுஞ்சாலை, பாலத்துக்கு மும்பைவாசிகளிடம் நியாயமற்ற முறையில் 2 முறை கட்டணம் வசூலிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.