மும்பை- நாக்பூர் விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளிடம் மது பரிசோதனை

சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளிடம் மது பரிசோதனை செய்யப்படும் என சட்டசபையில் மந்திரி ததா புஸ்சே தெரிவித்தார்.;

Update:2023-08-05 00:30 IST

மும்பை,

சம்ருத்தி விரைவு சாலையில் விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகளிடம் மது பரிசோதனை செய்யப்படும் என சட்டசபையில் மந்திரி ததா புஸ்சே தெரிவித்தார்.

அதிகரிக்கும் விபத்துகள்

சம்ருத்தி மகாமார்க் என்று அழைக்கப்படும் சம்ருத்தி விரைவு சாலை மும்பை - நாக்பூர் இடையே நாக்பூர், வாசிம், வார்தா, அகமதுநகர், புல்தானா, அவுரங்காபாத், அமராவதி, ஜல்னா, நாசிக் மற்றும் தானே ஆகிய 10 மாவட்டங்களின் வழியாக செல்கிறது. இதில் 600 கி.மீட்டர் சாலை பணிகள் முடிந்து பொதுப்போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் நாசிக்- தானே இடையே மீதமுள்ள 101 கிலோ மீட்டர் நீள பாதையில் பணிகள் நடைபெற்று வருகிறது. மும்பை-நாக்பூர் விரைவு சாலை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டதில் இருந்து ஏற்பட்ட விபத்துகளில் 110 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த சாலையில் அதிகரித்துவரும் விபத்து குறித்து சட்டசபையில் காங்கிரஸ் தலைவர் பிரிதிவிராஜ் சவான் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை மந்திரி ததா புஸ்சே கூறியதாவது:-

மது சோதனை

சம்ருத்தி சாலையில் விபத்துகளை தவிர்க்க கனரக மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களின் டிரைவர்கள் மது குடித்து உள்ளார்களா? என்பதை கண்காணிக்க 'ரேண்டம்' அடிப்படையில் சோதனை செய்யப்படும். இலகுரக வாகனங்களில் வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ. ஆகவும், கனரக வாகனங்கள் வேக உச்சவரம்பு மணிக்கு 80 கி.மீ. ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சாலையில் தவறான பாதையை பயன்படுத்துவதை தடுக்க கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்