மராட்டிய அரசை கவிழ்க்க ஆன செலவை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்வா?- தேசியவாத காங்கிரஸ் கேள்வி
மராட்டியத்தில் அரசை கவிழ்க்க ஆன செலவை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.;
மும்பை,
மராட்டியத்தில் அரசை கவிழ்க்க ஆன செலவை ஈடுகட்ட சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? என தேசியவாத காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
விலை உயர்வு
மத்திய அரசு இன்று கியாஸ் சிலிண்டரின் விலையை ரூ.50 உயர்த்தியது. கடந்த மே மாதத்திற்கு பிறகு 3-வது முறையாக கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான மகேஷ் தபசே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கணிசமான தொகை
மராட்டியத்தை சேர்ந்த 50 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முதலில் சூரத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் விமானம் மூலம் கவுகாத்திக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
இந்த முழு நடவடிக்கைக்கும் பின்னால் கண்ணுக்கு தெரியாத சக்தி ஒன்று கணிசமான தொகையை செலவழித்திருக்க வேண்டும்.
இதற்கும், தற்போதைய கியாஸ் சிலிண்டர் உயர்வுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று நாட்டின் சாமானிய குடிமக்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையும், கியாஸ் விலை உயர்வு எண்ணிக்கையும் ஒரே மாதிரியாக ஒலிக்கிறது. ஆனால் அதற்குள் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை குறைப்பதாக உறுதியளித்தார். ஆனால் அதற்குள் பா.ஜனதா கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியுள்ளது மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
யதார்த்தம் என்பதும் கருத்து என்பதும் வேறுவேறானது என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சுப்ரியா சுலே வலியுறுத்தல்
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே தனது டுவிட்டர் பதிவில், "சாமானிய மக்கள் ஏற்கனவே பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற விலை உயர்வுகளால் அவர்கள் மேலும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மும்பையில் மக்கள் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.1052-க்கு மேல் செலவிட வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே மத்திய பெட்ரோலிய மந்திரி ஹர்தீப் சிங் புரி இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்" என்றார்.