ரூ.12¼ லட்சம் நகை மோசடி செய்த 3 பேர் கைது
நகைக்கடை உரிமையாளர் நம்பிக்கையை பெற்று ரூ.12¼ லட்சம் நகை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்;
மும்பை,
மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் பகுதியை சேர்ந்தவர்கள் சுபாங்கர் பாசு(வயது28). சுவோஜித் பாக் (36), சஞ்சய் காந்தார் (38). கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி நகைக்கடை உரிமையாளர் ஒருவர் தின்தோஷி போலீசில் புகார் ஒன்று அளித்தார். இந்த புகாரில் 3 பேர் சேர்ந்து தனது நம்பிக்கையை பெற்று ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள நகைகளுடன் தலைமறைவாகி விட்டதாக தெரிவித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற 3 பேர் தொடர்பாக விசாரித்தனர். இதில் அவர்கள் நகைக்கடையில் சமர்ப்பித்து இருந்த அடையாள அட்டைகள் போலியானது என கண்டறியப்பட்டது. இவர்கள் குர்லா, பைதோனி மற்றும் ராஜஸ்தான், லக்னோ ஆகிய இடங்களில் உள்ள நகைக்கடையில் இதே பாணியில் கைவரிசை காட்டி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க நடத்திய விசாரணையில் 3 பேர் மும்பைக்கு வரவுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அங்கு வந்த 3 பேரை பிடித்து கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.