இலச்சினை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படும்; 'இந்தியா' கூட்டணிக்கு அமைப்பாளர் தேவையில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி

'இந்தியா' கூட்டணிக்கு அமைப்பாளர் தேவையில்லை என்றும், இலச்சினை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

Update: 2023-09-01 19:45 GMT

மும்பை, 

'இந்தியா' கூட்டணிக்கு அமைப்பாளர் தேவையில்லை என்றும், இலச்சினை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்றும் உத்தவ் தாக்கரே கூறினார்.

இலச்சினை, அமைப்பாளர்

மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் இலச்சினை 'லோகோ' வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் கூட்டணிக்கான இலச்சினை வெளியிடப்படவில்லை. இதேபோல கூட்டணிக்கு அமைப்பாளர் என யாரும் நியமிக்கப்படவில்லை. இதுதொடர்பாக இந்தியா கூட்டணி கூட்டம் முடிந்த பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறியதாவது:- மக்கள் பிரச்சினைக்காக போராடுவதால், கூட்டணிக்கான இலச்சினை வடிவமைப்பில் மக்களிடம் கருத்து கேட்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது. எனவே கூட்டணி இலச்சினை அமைக்க மக்களிடம் பரிந்துரைகள் கேட்கப்படும். அதன்பிறகு சிறந்த இலச்சினை வெளியிடப்படும். இலச்சினை வெளியிடுவதில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் 2, 3 விதமான இலச்சினையை தயாராக வைத்து இருந்தோம். ஆனால் மக்களிடம் கருத்து கேட்கலாம் என்ற முடிவு அனைவருக்கும் பிடித்து இருந்ததால், இலச்சினை வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது.

அமைப்பாளர் தேவையில்லை

இந்தியா கூட்டணிக்கு அமைப்பாளர் பதவி தேவையில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட உள்ளது. இதுதான் முன்னோக்கி செல்ல எளிய வழி. எல்லா இடங்களிலும் பா.ஜனதாவுக்கு எதிராக இருமுனை போட்டியை உருவாக்க முடிவு செய்து உள்ளோம். மராட்டியத்தில் உழவர், உழைப்பாளர் கட்சி கூட்டணியில் இணைந்து உள்ளது. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியையும் கூட்டணியில் இணைக்க பேசி வருகிறோம். இதேபோல அந்தந்த மாநிலங்களில் ஒருங்கிணைப்பு கமிட்டிகள் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதேபோல விநாயகர் சதுர்த்தி கொண்டாட்ட நேரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கும் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்