கட்சி உடைந்த ஒரு வாரத்தில் 3 முறை அணி மாறிய தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.

தேசியவாத காங்கிரஸ் உடைந்த ஒரு வாரத்தில் அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் 3 முறை அணிமாறிய சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-07-10 19:00 GMT

மும்பை, 

தேசியவாத காங்கிரஸ் உடைந்த ஒரு வாரத்தில் அந்த கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் 3 முறை அணிமாறிய சம்பவம் நடந்து உள்ளது.

3 முறை அணி மாறிய எம்.எல்.ஏ.

தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உடைந்தது. அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றதை அடுத்து இந்த பிளவு ஏற்பட்டது. அஜித்பவாருக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர். கட்சியின் தலைவரும், அஜித்பவாரின் சித்தப்பாவுமான சரத்பவாருக்கு குறைந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இந்தநிலையில் அந்த கட்சியை சேர்ந்த சத்தாரா, வய் தொகுதி எம்.எல்.ஏ. மகரந்த் பாட்டீல் ஒரு வாரத்தில் 3 முறை அணிமாறிய சம்பவம் நடந்து உள்ளது. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்பவார் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்ற விழாவில் கலந்து கொண்டார். பின்னர் அவர் சரத்பவார் அணிக்கு மாறினாார். சரத்பவார் சத்தாரா மாவட்டம் காரட்டில் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் மகரந்த் பாட்டீலும் பங்கு பெற்றார். இந்தநிலையில் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி மீண்டும் அஜித்பவார் அணியில் இணைந்து உள்ளார்.

காரணம் என்ன?

தனது தொகுதியில் நிதி பிரச்சினையில் சிக்கி தவிக்கும் 2 சர்க்கரை ஆலைகளை காப்பாற்ற அஜித்பவார் அணிக்கு மாறியதாக மகரந்த் பாட்டீல் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அடுத்தடுத்து அணி மாறியது தொடர்பாக அவர் கூறுகையில், "அஜித்பவார் பதவி ஏற்ற போது 9 மந்திரிகளின் பட்டியலில் எனது பெயரும் இருந்தது. ஆனால் நான் எனது ஆதரவாளர்கள், தொகுதி மக்களிடம் ஆலோசிக்க வேண்டும் என அஜித்பவாரிடம் கூறிவிட்டேன். அஜித்பவார், சரத்பவார் 2 பேரும் எனக்கு முக்கியமானவர்கள். இந்த விவகாரத்தில் முடிவு எடுப்பது கடினமாக இருந்தது. சமீபத்தில் தான் நிதிநெருக்கடியில் உள்ள 2 சர்க்கரை ஆலைகளை கையகப்படுத்தினேன். அந்த ஆலைகளுக்காக தான் தேர்தலில் போட்டியிட்டேன். ஆட்சியில் இல்லாததால் சர்க்கரை ஆலையை நடத்த மிகவும் சிரம பட்டோம். எனவே தான் அஜித்பவார் அணியில் தற்போது இணைந்தேன்" என்றார். பொதுவாக அரசியல் கட்சிகள் அடிக்கடி கூட்டணியை மாற்றி மக்களை தான் குழப்புவார்கள். தற்போது தலைவர்கள் கட்சியை உடைத்து சொந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களையே குழப்பத்தில் விட்டுவிடுவதால், எம்.எல்.ஏ. ஒருவர் ஒரு வாரத்தில் 3 முறை அணிமாறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்